;
Athirady Tamil News

நிமிடத்திற்கு ஒருவர் பலி.. தினசரி பல ஆயிரம் பேருக்கு கொரோனா!

0

சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், கடந்த வாரம் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரப்பூர்வ தகவலே இவ்வளவு அதிகமாக இருக்கும் நிலையில், உண்மையில் இதைவிட பல ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. கொரோனா வேக்சின், சுகாதார ஊழியர்களின் கடுமையான உழைப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால், அனைத்து நாடுகளிலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக நம்மால் சொல்லிவிட முடியாது. குறிப்பாக நமது அண்டை நாடான சீனாவில் இப்போது நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது.

சீனா
சீனாவில் இத்தனை காலமாக கடைபிடிக்கப்பட்ட ஜீரோ கோவிட் கொள்கை தான இப்போது அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. மக்கள் ஜீரோ கோவிட் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிக்கவே கட்டுப்பாடுகளை அனைத்தையும் நீக்கியது சீனா. அங்கு பெரும்பாலான மக்களுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இதனால் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவியது… சீனாவின் கோவிட் வேக்சின்களுக்கும் பெரியளவில் கை கொடுக்காமல் போக மொத்தமாக அங்கு சுகாதார கட்டமைப்பே முடங்கி போனது.

13 ஆயிரம் மரணங்கள்

இப்போது சீனாவில் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 13 மற்றும் 19 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சீனாவில் 13,000க்கும் அதிகமாக கொரோனா தொடர்பான மரணங்கள் சீனாவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜன.12ஆம் தேதி வரை மட்டும் மருத்துவமனைகளில் சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சீன அதிகாரிகள் கூறியிருந்தனர்.

நிமிடத்திற்கு ஒருவருக்கு மேல் பலி
இருப்பினும், சீனா வெளியிட்டுள்ள இந்த தகவல் உண்மையானதாக இருக்காது என்றும் உண்மையான உயிரிழப்புகள் இதை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் பல்வேறு வல்லுநர்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தகவல்படி கடந்த ஜன. 13 முதல் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது நிமிடத்திற்கு 1.2 கொரோனா உயிரிழப்புகள் இந்த காலகட்டத்தில் பதிவாகியுள்ளது.

பல மடங்கு அதிகம்
சுவாசக் கோளாறு காரணமாக 681 நோயாளிகளும் இதர காரணங்களால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நேரத்தில் 11,977 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இது மருத்துவமனைகளில் பதிவான உயிரிழப்புகள் மட்டுமே. இதில் வீடுகளில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. இருப்பினும், ஒட்டுமொத்தமாக உண்மையான கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு கொரோனா அலை?
அங்கு ஜீரோ கோவிட் கொள்கை நீக்கப்பட்டத்தில் இருந்து சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீனாவில் இப்போது புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த காலகட்டத்தில் மட்டும் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 36,000ஆக இருக்கும் என்று ஏர்ஃபினிட்டி என்ற நிறுவனம் கணித்துள்ளது. இப்போது அங்கு புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், பல லட்சம் பேர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வல்லுநர்கள்
இருப்பினும், சீனாவில் தற்போதைய சூழலில் கொரோனா இரண்டாம் இலை ஏற்பட வாய்ப்பில்லை என்று அங்குள்ள சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்கு பொதுமக்களில் 80% பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் இதனால் நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அந்நாட்டின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ கூறினார் தெரிவித்துள்ளார். எனவே, குறைந்தது அடுத்த 3 மாதங்களுக்கு சீனாவில் அடுத்த கொரோனா அலை ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.