உங்க எக்ஸ் மேல கோபமா? காதலர் தினத்தில் கரப்பான்களுக்கு பெயரிட.. மிருகக்காட்சி சாலை அழைப்பு!!
காதலர் தினத்தை முன்னிட்டு கனடாவில் உள்ள டொராண்டோ மிருகக்காட்சி சாலையில் கரப்பான் பூச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் பெயரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடும் பெயர்கள் பயணிகளின் பெயருடன் சேர்த்து டிஜிட்டல் வடிவ சர்டிஃபிகேட்டாக கொடுக்கப்படும்.
காதலர் தினம் என்றாலே ரோஜாக்கள், வாழ்த்து அட்டைகள், மோதிரங்கள் என இப்படியான பரிசுகள் கொடுப்பது வழக்கம்தான். ஆனால் காலம் மாறிக்கொண்டே வருகிறது. அந்த மாற்றத்திற்கு ஏற்றார்போல் பரிசுகளும் மாறிக்கொண்டே வருகின்றன. அந்த வகையில் தற்போது கடனாவின் டொராண்டோ மிருகக்காட்சி சாலை புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி காதலர் தினத்தையொட்டி சுற்றுலாப்பயணிகள் இந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள வளர்ப்பு கரப்பான் பூச்சிகளுக்கு பெயரிடலாம் என்று கூறியிருக்கிறது.
மேலும், “பெயரிட விரும்பும் நபர்கள் மிருகக்காட்சி சாலைக்கு ரூ.2,033 நன்கொடையாக வழங்க வேண்டும். இப்படி வழங்கும் நபர்கள் தாங்கள் விரும்பும் பெயர்களை வைத்துக்கொள்ளலாம். ஆனால் கௌரவமான பெயர்களை வைக்க வேண்டும். இவர்கள் வழங்கும் பெயர்கள் டிஜிட்டல் வடிவிலான சர்டிஃபிகேட்டாக பயணியின் பெயருடன் வழங்கப்படும்” என்று கூறியுள்ளது. பெரும்பாலான நபர்கள் தங்கள் முன்னாள் காதலி/காதலன் பெயரைதான் கரப்பான் பூச்சிகளுக்கு வைத்து வருகின்றனர்.
வரம்புகள்
எப்படி இருந்தாலும் பெயரிடுவதற்கு வரம்புகள் இருப்பதாக மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது. வெறுக்கத்தக்க பெயர்கள் மற்றும் அவதூறுகளை தூண்டும் வகையில் உள்ள பெயர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து மிருகக்காட்சி சாலை நிர்வாகம் மேலும் கூறியுள்ளதாவது, ‘உங்கள் நண்பர்கள், முதலாளி, முன்னாள் நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய பெயரை வேண்டுமானாலும் கரப்பான் பூச்சிக்கு வழங்கலாம். டொராண்டோ மிருகக்காட்சிசாலை வன விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களையும் மதிக்கிறது. அது சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி.
எதிர்ப்பு
கரப்பான் பூச்சிகளை பொறுத்த அளவில் இவைகள் குப்பைகளையும் விலங்குகளின் மலக்கழிவுகளையும் சிதைக்க உதவுவதன் மூலம் சூழலியலுக்கு பங்காற்றுகிறது. மட்டுமல்லாது பல உயிரினங்களுக்கு இது உணவாகவும் இருக்கிறது’ என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு டிவிட்டரில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் சிலர் இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதேபோல் பலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இது ஒரு வேடிக்கையான விளையாட்டு என்றும், மிருகக்காட்சி சாலை புத்திசாலித்தனமாக செயல்படுகிறது எனவும் தங்கள் கருத்துகளை கமெனட்டில் தெரிவித்து வருகின்றனர்.
கரப்பான்
பொதுவாக கரப்பான் பூச்சிகள் உலகின் அருவருப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், விஞ்ஞானிகள் இதனை வேறு மாதிரியாக பார்க்கின்றனர். நிலநடுக்கம், மண் சரிவு, கட்டுமான இடிபாடுகள் ஆகியவற்றில் சிக்கியுள்ள மக்களை கண்டுபிடிக்க இந்த கரப்பான் பூச்சிகள் பயன்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் கரப்பான் பூச்சிகளை பழக்கி அதனை வைத்து மேற்குறிப்பிட்ட பேரிடரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மனித சமூகம் ஈடுபடும் என்று கூறியுள்ளனர்.
ஆய்வு
தற்போது கரப்பான்களை போலவே சில ரோபோக்களை உருவாக்கி அதனை இதுபோன்ற மீட்பு பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபடுத்தி வருகின்றனர்.
அதேபோல கரப்பான் பூச்சியின் கால்கள் வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டது என்பதால் இதற்கான மூலாதாரம் எது என்பதை கண்டுபிடித்து அதேபோல மனித உடல் பாகங்கள் வளர வைப்பதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.