;
Athirady Tamil News

போலாந்தில் இந்திய பீர் தயாரிப்புக்கு யுக்ரேன் போர் காரணமானது எப்படி?

0

இரண்டு இந்தியர்கள் போலந்தில் முதன்முதலில் இந்திய அவல் உடன் ஐரோப்பிய ஹாப்ஸை (கோன் வடிவிலான மலர்) இணைத்து கலப்பின பீர் விற்பனை செய்துள்ளார்கள். யுக்ரேன் போர் அவர்களின் பயணத்தை எவ்வாறு வடிவமைத்தது என்பதை பிபிசியின் இம்ரான் குரேஷி கண்டுபிடித்தார்.

ஓராண்டுக்கு முன்பு, போலந்தில் வசிக்கும் இந்தியரான சந்திர மோகன், 20,000 கிலோ அவல்களை ஒரு வாடிக்கையாளர் எடுத்துக்கொள்ள விரும்பாததால், நெருக்கடியில் சிக்கினார்.
வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அவல், தானியங்கள் தயாரிப்பதற்காக போலாந்தின் உள்ளூர் தொழிலதிபரால் இறக்குமதி செய்யப்பட்டன.

அந்த நேரத்தில்தான் யுக்ரேனில் போர் தொடங்கியது. போலாந்து துறைமுகத்தில் அவல்கள் அடங்கிய சரக்கு பெட்டிகளுடன் கூடிய கப்பல் வந்து இறங்குவதற்கு முன்பாக, விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் மோகனின் வாடிக்கையாளர் அவலை இறக்குமதி செய்வது குறித்து அச்சம் அடைந்தார்.

இதையடுத்து, இந்தோ-போலந்து வர்த்தக சம்மேளனத்தின் உதவியை அவர் நாடினார். சந்திர மோகன் அதில் வணிக உறவுகளின் தலைமை பொறுப்பில் இருந்தார்.
தனது நண்பர் சர்கேவ் சுகுமாரன் உடன் இணைந்து அவல்களை வாங்கிய மோகனுக்கு பீர் தயாரிக்கும் எண்ணம் ஏற்பட்டது.
“மலையாளி என்ற பெயரில் பீர் தயாரிக்கலாம் என்று இருப்பதாக சந்திரன் கூறினார்” என்று பழைய நினைவுகளை கூறுகிறார் சுகுமாரன்
அவர்கள் இருவருமே இந்தியாவின் கேரளாவை தாயகமாக கொண்டவர்கள்.
“இந்திய மற்றும் கேரள மரபுகளுடன் கூடிய நமது வரலாற்றில் ஊறிய; அதேவேளையில் உலகளாவிய நுகர்வோர்களை ஈர்க்கக்கூடிய ஒரு தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருந்தது ” என்று கூறுகிறார் சுகுமாரன்.
பீரில் அவல் பயன்படுத்தப்பட வேண்டும் என்றபோதிலும் முற்றிலும் அது அரிசி சார்ந்த பீராக இருக்கக்கூடாது என்பதில் இருவருமே கவனமாக இருந்தனர்.
இந்த எண்ணம் புதுமையானது இல்லை.
“ஏற்கனவே, ஜப்பான் நாட்டில் ஒரு பீர் வகை அரிசியுடன் ஜப்பானிய ஹாப்ஸ் கலந்து தயாரிக்கப்படுகிறது.” என்று மோகன் தெரிவித்தார்.
எனவே ஐரோப்பிய ஹாப்ஸை பயன்படுத்தி தங்களின் தயாரிப்பை அதிலிருந்து வித்தியாசப்படுத்தலாம் என நினைத்தனர்.

மோகனும் சுகுமாரனும் ஆலோசனை பெறுவதற்காக மற்றொரு மலையாளியை நாடினர்.
ஜோ பிலிப் தனது சொந்த பீர் பிராண்டான கலிகுட் 1498 – தொற்றுநோய்க்கு முன்பு போலந்தில் அறிமுகப்படுத்தினார். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை குறிக்கும் விதமாக கலிகுட் என்ற பெயரை அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.
அவரின் வழிகாட்டுதலில் தங்களது சொந்த பீரை தயாரிக்கும் பணியில் மோகனும் சுகுமாரனும் ஈடுபட்டனர்.

“போலந்தில், மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து, குறிப்பாக பெல்ஜியத்திலிருந்து நல்ல பியர்களை நீங்கள் பெறலாம்” என்கிறார் சுகுமாரன். ஆனால் இவற்றில் அரிசி பயன்படுத்தப்படவில்லை.
மோகனுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. எனவே, பீரை ருசி பார்ப்பது மற்றும் பரிசோதனை செய்யும் பொறுப்பை சுகுமாரன் ஏற்றுக்கொண்டார்.

“நாங்கள் சில முறை முயன்றோம். எங்களின் மூன்றாவது முயற்சியில் வெற்றிபெற்றோம் ” என்று சுகுமாரன் தெரிவித்தார்.
பெரிய அளவில் பீரை தயாரிக்க வேண்டும் என்ற சவால் தற்போது அவர்கள் முன்பு வந்தது.

குறைந்த பட்ச ஆர்டரில் கொதிகலனை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுபான ஆலையில் இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அடுத்தது, பீர்களை விற்பனை செய்ய உணவகங்களை அவர்கள் பெற வேண்டியிருந்தது.
மோகன், போருக்குப் பிறகு யுக்ரேனில் இருந்து வெளியேறிய இந்தியர்களுக்கு உதவி செய்யும் வெளிநாட்டினர் குழுவை வழிநடத்தி வந்தார்.

“பெரும்பாலான தன்னார்வலர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்” என்று அவர் கூறுகிறார். “மலையாளியாக இருப்பது [எங்களை இணைத்த] ஒரு உணர்ச்சி என்பதை நான் உணர்ந்தேன்.”
இது தங்கள் தயாரிப்புக்கு ‘மலையாளி பீர்’ என பெயர் சூட்ட அவர்களுக்கு உத்வேகமாக இருந்தது.
பிராண்டிங் வடிவமைப்புக்கு அவர்களின் கலாச்சார அடையாளமும் உதவியது.

கேரளாவின் பாரம்பரிய நடனமான கதக்களி ஆடும் கலைஞர் தலையில் அணியும் கீரிடத்துடன், தங்கள் மாநிலத்தில் திரைப்படத்திற்கு இருக்கக் கூடிய வரவேற்பை வெளிப்படுத்தும் விதமாக ஏவியேட்டர் கூலிங்கிளாஸ் மற்றும் மோகன்லாலின் தாடி ஆகியவற்றை சேர்த்து லேபிலை உருவாக்கினார்.

வணிகத்தைத் தக்கவைக்க, இருவரும் திருமண திட்டமிடுபவர்களுக்கு தங்களின் பீர் சேவையை வழங்கினர். குறிப்பாக போலந்து குடிமக்களை திருமணம் செய்யும் இந்திய குடியேற்றவாசிகள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றது.
இப்போது, மலையாளி ஸ்பிரிட்ஸ் – மோகனும் சுகுமாரனும் இணைந்து நிறுவிய நிறுவனம் – ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் 2,400 லிட்டர் (5,074 பின்ட்கள்) பீர் வழங்க இந்திய மற்றும் ஆசிய விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை விற்றுள்ளதாக கூறும் இவர்களது நிறுவனம், விரைவில் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
“தற்போது ஐரோப்பாவின் பிற நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இருந்தும் தங்களை தொடர்புகொள்கின்றனர்” என்று மோகன் கூறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.