சிரியாவில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து 16 பேர் பலி!!
சிரியாவின் வடக்கு நகரமான அலப்போ நகரம் அமெரிக்கா ஆதரவு குர்தீஷ் படை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தில் 30 பேர் வசித்து வருகின்றனர். நேற்று திடீரென இந்த கட்டிடம் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஓரு குழந்தை உள்பட 16 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு பலியானவர்கள் உடல்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் தவிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கட்டிடத்தின் அடிப்பகுதி நீர்கசிவு காரணமாக பலவீனமாக இருந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இதனால் இங்குள்ள பெரும்பாலான குடியிருப்புகள் சேதம் அடைந்து உள்ளன. இந்த சூழ்நிலையில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அலெப்போ நகரம் ஒரு காலத்தில் சிரியா நாட்டின் வர்த்தக நகராக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.