பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் பலி!!
பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசாரய் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோருக்கு பார்வை பறிபோனது.
இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சிவான் மாவட்டத்தில் உள்ள லகாரி நபிகஞ்ச் பகுதியில் உள்ள பாலா கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 3 பேரை அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.