கொரோனா கட்டுப்பாடு தளர்வு எதிரொலி சீனாவில் களை கட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்!!
சீனாவில் கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டதால், அங்கு மக்கள் புத்தாண்டை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், பூஜ்ஜிய-கொரோனா கொள்கை அமல்படுத்தப்பட்டது. பின்னர், உலக நாடுகளுக்கான விசாவில் தளர்வு அளிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. பிறகு, சீன புத்தாண்டு வரவிருப்பதையும் மக்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராக, அரசும் பூஜ்ஜிய-கொரோனா கொள்கையை திரும்ப பெற்றது. இதையடுத்து, வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள் புத்தாண்டை கொண்டாட தாயகம் திரும்பியதால், புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியது. இந்நிலையில் சீன புத்தாண்டு கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை உடன் நேற்று கோலாகலமாக, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இது சந்திர-சூரிய சீன நாள்காட்டியின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு ‘‘வசந்த விழா ஆகும்.சீனாவில் பாரம்பரிய லூனார் நாள்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. சீன நாள்காட்டியில் உள்ள 12 விலங்கு ராசிகளில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் சீனர்கள் வசந்த விழாவை கோலாகலமாக கொண்டாடி வரவேற்றனர்.