டிசெம்பர் மாத பணவீக்கம் சரிவு !!
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், திங்கட்கிழமை (23) தெரிவித்தது.
2022 ஒக்டோபரில் 70.6 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததாகவும் டிசெம்பரில் 59.2 சதவீதமாக மேலும் குறைவடைந்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாதாந்த அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் 2022 நவம்பரில் 69.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில், 2022 டிசம்பரில் 59.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
2022ஆம் ஆண்டு நவம்பரில் 60.4 சதவீதமாக இருந்த மாதாந்த அடிப்படையிலான உணவு அல்லாத பணவீக்கம் டிசம்பரில் 59.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு டிசெம்பரில் குறைந்து காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் உணவு மற்றும் உணவு அல்லாத பணவீக்கம், 2022ஆம் ஆண்டு டிசெம்பரில் அதிகரித்த போக்கினை காண்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.