ஸ்வீடனில் குரான் எரிப்பு சம்பவம்: இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக துருக்கி கொந்தளிப்பு!!
ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தில் குரானை தீயில் வைத்து எரிந்த சம்பவம், இஸ்லாமிய நாடுகளில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வீடனை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் என்பவர் இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துகளை கூறி வருபவர். இவர் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கி தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயில் எரித்தார். இந்தச் செயலை பலரும் கண்டித்தனர். இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கி கண்டனம் தெரிந்தது.
மேலும், இம்மாதிரியான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஸ்வீடனிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடன் அரசை கண்டித்து துருக்கியில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் தனது துருக்கி பயணத்தையும் ரத்து செய்துள்ளார். மேலும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் டொபையாஸ் பில்ஸ்ட்ரோம், “இந்தச் சம்பவம் அதிர்ச்சியூட்டக் கூடியது” எனக் கூறியுள்ளார்.
டொபையாஸ் பில்ஸ்ட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்வீடனில் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால், அதற்காக, இங்குள்ள அரசோ அல்லது நானோ ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளை ஆதரிப்பவர்கள் கிடையாது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோ உறுப்பினர் ஆவதற்கு விண்ணப்பித்துள்ளன. நேட்டோவில் உறுப்பினரான துருக்கி உள்ளது. இந்தச் சூழலில் ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை துருக்கியால் எதிர்க்கவும் நிறுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.