முடக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் – அன்பழகன் பேச்சு!!
அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாதா கோவில் அருகில் நடந்தது.
மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். அவைதலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கோவிந்தசாமி, தலைமை கழக பேச்சாளர்கள் பாத்திமா பாபு. சின்னராஜீ ஆகியோர் ஏழைகளுக்கு மின்விசிறி, சில்வர் குடம், சேலை வழங்கினர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
புதுவையில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை தனது சதித்திட்டத்தின் மூலம் தி.மு.க. தடுத்து நிறுத்தியது. மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி நடத்திய பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த தி.மு.க. பலரையும் தூண்டிவிட்டது.
உச்சகட்டமாக காவல்துறை டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து புகார் அளித்தது. ஆனாலும் பந்த் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்தனர். ஒரு அ.தி.மு.க. தொண்டனின் செயல்பாட்டை கூட தி.மு.க.வால் தடுத்து நிறுத்திட முடியாது.
இதன் மூலம் மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க.வின் இரட்டை வேஷம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.மாநில அந்தஸ்துக்கு எதிரான கட்சி தி.மு.க. என்பதை மக்கள் உணர வேண்டும்.
கடந்த தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என கூறி நாம் ஆட்சிக்கு வந்தோம். அந்த அடிப்படையில் நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்த வேண்டும். மூடப்பட்ட பஞ்சாலைகளையும், ரேஷன் கடைகளையும் அரசு உடனடியான திறக்க வேண்டும். பொது வினியோக திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து குறைந்த விலையில் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசினார்.