தன்னிச்சையாக செயற்படும் அரசாங்கத்திற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுக்க முடியும் – பீரிஸ்!!
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறு பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத்தேர்தலை நடத்தும் மக்கள் பேரணியை தோற்றுவிக்கும்.தன்னிச்சையாக செயற்படும் அரசாங்கத்திற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாகவே மக்கள் பதிலடி கொடுக்க முடியும்.
தேர்தலுக்கு நிதி இல்லை என்று குறிப்பிடும் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சுக்களை விரிவுப்படுத்த முயற்சிப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கணடவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தலை நடத்துவதை தவிர அரசாங்கத்திற்கு மாற்று வழியேதும் கிடையாது.மக்களாணைக்கு அஞ்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளாத முயற்சி ஏதும் கிடையாது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தும் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறிவிக்கவில்லை.
ஆகவே ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து வேறுப்பாடு உள்ளது என அரசாங்கம் காலாவதியான புதிய தர்க்கத்தை தற்போது முன்வைக்கிறது.
மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலை நடத்தும் திகதி கடந்த சனிக்கிழமை (21) அறிவிக்கப்பட்டது.இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தில் ஆணைக்குவின் தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மாத்திரம் இருந்துள்ளனர், ஏனைய உறுப்பினர்கள் நிகழ்நிலை முறைமை ஊடாக கலந்துக் கொண்டு தேர்தலை நடத்தும் திகதியை ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளார்கள்,ஆகவே ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு என்ற அரசாங்கத்தின் தர்க்கம் செல்லுபடியற்றது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்த வேண்டுமா என்று குறிப்பிடுபவர்கள் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கி தீர்ப்புக்களை மீட்டிப்பார்க்க வேண்டும்.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களின் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதேனும் கிடையாது.
நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கும்,கருத்துக்களுக்கும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு தேர்தல் ஊடாகவே மக்கள் பதிலடி கொடுக்க முடியும்,அதற்காக இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுவது அவசியம்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தும் மக்கள் பேரணியை தோற்றுவிக்கும்.உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பெறுபேற்றை அடிப்படையாக கொண்டு சர்வதேசம் இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தும்.
தேர்தலை நடத்த நிதி இல்லை என அரசாங்கம் நிதியமைச்சின் செயலாளர் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆகவே நிதி இல்லை என்ற தர்க்கம் சாத்தியமற்றது.வங்குரோத்து நிலை அடைந்துள்ள நாட்டில் தேர்தல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,
தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிடும் அரசாங்கம் இராஜாங்க அமைச்சுக்களை 38 ஆக அதிகரித்துள்ளதுடன்,அமைச்சரவை அமைச்சுக்களை விஸ்தரிக்க அவதானம் செலுத்தியுள்ளது.38 இராஜாங்க அமைச்சுக்களினால் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை.
38 இராஜாங்க அமைச்சுகளுக்கான விடதானங்கள் கூட இதுவரை வேறுப்படுத்தப்படவில்லை.மக்கள் நிதியை மோசடி செய்யும் வகையில் இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றார்.