பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க முஸ்தீபு!!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் யோசனையை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்க ஆளுந்தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டத்தில் மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அத்துடன், மின்கட்டண அதிகரிப்புக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இடமளிக்காமல் இருப்பது தொடர்பில் ஆளும் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
தன்மை பதவி நீக்க முன்னர் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை பதவி நீக்கி, துறைசார் திறன் கொண்ட புத்திசாலித்தனமான ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமித்தால் இணக்கமாக செயற்பட முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை கடந்த 9ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியது. இதற்கமைய மின்கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி யோசனை முன்வைக்க வேண்டும். யோசனை முன்வைக்காவிட்டால், ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் மின்கட்டணத்தை அதிகரிக்க முடியும் என அரசாங்கம் குறிப்பிட்டது.
அரசாங்கம் குறிப்பிடுவதை போன்று மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை விரைவாக முன்வைக்க முடியாது. குறைந்தபட்சம் 45 அல்லது 55 நாட்களேனும் தேவை.
மின்னுற்பத்திக்கு செலவாகும் உண்மை தொகையை மின்சாரத்துறை அமைச்சு முன்வைத்தால் மின்கட்டணத்தை நியாயமான முறையில் திருத்தம் செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சருக்கும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகின்ற நிலையில் மின்கட்டண அதிகரிப்பு இழுபறி நிலையில் உள்ளது.
23 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின், மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.
மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை கிடையாது. 2022.08.31ஆம் திகதி மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதால் மின்சாரத்துறை இலாபமடைந்துள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுகிறார்.
இவ்வாறான பின்னணியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை தவிர்த்து ஏனைய உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுகிறார். அவரை பதவி நீக்கி, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
தன்மை பதவி நீக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டும். அது கடினமானது. ஆனால், மின்சாரத்துறை அமைச்சரை ஜனாதிபதியால் ஒருசில மணித்தியாலங்களில் பதவி நீக்க முடியும்.
ஆகவே, மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகரை பதவி நீக்கி, துறைசார் திறன் கொண்ட சிறந்த புத்திசாலித்தனமான ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமித்தால் முரண்பாடு இல்லாமல் இணக்கமாக செயற்பட முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.