நிதி நெருக்கடி உள்ளதாக திறைசேரி இதுவரை அறிவிக்கவில்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!!
திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படும். நிதி நெருக்கடி உள்ளது என திறைசேரி இதுவரை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ன.
அங்கிகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்படும். வேட்பு மனுத்தாக்கலின் பின்னர் தேர்தல் பிற்போடப்படும் என நாட்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய தேவை இல்லை. தேர்தலை பிற்போடுவதற்கான ஏற்றுக்கொள்ள கூடிய காரணிகள் ஏதும் கிடையாது.
தேர்தலை நடத்த நிதி நெருக்கடி உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைச்சேரி இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.வரவு செலவு திட்டத்தின் ஊடாக தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்த விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.கடந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தல் மிக எளிமையான முறையில் நடத்தப்படும்.
செலவுகளை முடியுமான அளவு குறைத்து தேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பத்திரங்களை அச்சிடும் பணிகள் இவ்வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.