தேர்தலுக்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவிக்காதது ஏன்? ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒருமித்து எடுக்காத தீர்மானம் செல்லுபடியற்றது – பிரதீபா மஹாநாம!!
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒருமித்து தீர்மானிக்கவில்லை.
எனவே அந்த தீர்மானம் செல்லுபடியற்றது. தேர்தலுக்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவிக்காதது ஏன் என்று முன்னாள் மனித உரிமை ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம ஹேவா கேள்வியெழுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு அதன் அனைத்து உறுப்பினர்களினதும் பங்குபற்றல் இன்றி எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியானதல்ல என்று முன்னாள் மனித உரிமை ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை என்றும் கலாநிதி பிரதீபா மஹாநாம சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு ஆணைக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்தனர் என்பதை மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கான தினத்தை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடுவதேயன்றி , அதனை ஊடக அறிக்கைகள் மூலம் வெளியிடுவது சட்ட ரீதியானதல்ல.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் பின்னணியின் நாளை புதன்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. இந்நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு நெருக்கடியான நிலைமையில் உள்ளது. இவ்வாறான நிலையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து ஐவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எனவே தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.
தேர்தல் திகதியை தீர்மானிப்பது போன்ற முக்கியமான பணிகளுக்கு முழு ஆணைக்குழுவும் தேவை என தெரிவித்த அவர், தேர்தல் திகதியை வர்த்தமானி மூலம் அறிவிக்காமல் மறைமுகமாக அறிவிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.