உக்ரைன் விவகாரத்தால் உறவில் விரிசல்… தூதர்களை வெளியேற்றிய ரஷியா- எஸ்டோனியா!!
உக்ரைன் போர் காரணமாக ரஷியாவுக்கும் எஸ்டோனியாவுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நாடுகள் ரஷியாவின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், தற்போது தூதர்களை திருப்பி அனுப்பும் அளவுக்கு சென்றுள்ளது.
ரஷியா தனது நாட்டில் உள்ள எஸ்டோனியா தூதரகத்தில் உள்ள தூதரை பிப்ரவரி 7ம் தேதிக்குள் வெளியேறும்படி உத்தரவிட்டு சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள எஸ்டோனியா, அதே 7ம் தேதிக்குள் ரஷிய தூதர் தனது நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என சம்மன் அனுப்ப உள்ளது.
இவ்வாறு ஒருவருக்கொருவர் நாடுகளிலிருந்து தூதர்களை வெளியேற்றும் உத்தரவால், தூதரகப் பணிகள் பொறுப்பாளர்களால் மேற்கொள்ளப்படும். இதேபோல், அண்டை நாடான எஸ்டோனியாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லாட்வியா நாடு, பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷியாவுடனான தூதரக உறவுகளை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “எஸ்டோனியா அரசு ரஷியாவுடனான முழு அளவிலான உறவுகளையும் வேண்டுமென்றே அழித்துவிட்டது” என்று குற்றம்சாட்டியது.