கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் ஆள்குறைப்பு அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர் வேலையிழந்து தவிப்பு!!
அமெரிக்காவில் கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கையால் 80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 2 லட்சம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இதில், ஏராளமான இந்தியர்கள் அடங்கும்.
இதுகுறித்து தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து ஐடி துறையில் 2 லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், டிவிட்டர் நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இந்த ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் எச்-1பி, எல்1 விசாவில் அமெரிக்கா வந்தவர்கள். எச்-1பி விசா வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு வேலைக்கு எடுப்பதாகும். தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனா, இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 10ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களை வேலைக்கு எடுத்து வருகிறது.
எல்1ஏ-எல்1பி விசா என்பது, தற்காலிகமாக நிறுவனங்களுக்குள் ஊழியர்களை மாற்றிக்கொள்ளும் விசாவாகும். வேலையிழந்த 60 நாட்களுக்குள் புதிய வேலை தேடாவிட்டால், அமெரிக்காவை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும். தற்போதைய நிலவரப்படி 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மென்பொருள் வல்லுனர்கள் அமெரிக்காவில் வேலை இழந்துள்ளனர் என்று கூறியுள்ளது.