;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்!!

0

கணவர் இறந்தவுடன் பெண்களும் உடன் கட்டை ஏறும் பழக்கம் முன்பு இருந்தது. சமூக சீர்திருத்தவாதிகளால் அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் குறைந்த வயதில் கணவரை இழந்த பெண்கள் பலர் வாழ்க்கை துணை இல்லாமல் தனியாக வாழும் நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் தந்தையை இழந்த வாலிபர் ஒருவர் அவரது 45 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. கோலாப்பூரை சேர்ந்தவர் யுவராஜ் செலே(வயது23). இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தையின் மரணத்துக்கு பிறகு தாய் ரத்னா சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதை கண்டு யுவராஜ் செலே வேதனை அடைந்தார். குறிப்பாக சுபநிகழ்ச்சிகளுக்கு வாலிபரின் தாயை யாரும் அழைப்பது இல்லை. இதேபோல தாய் பெரும்பாலான நேரம் வீட்டில் தனியாக இருப்பதை கவனித்த யுவராஜ், தாய்க்கு வாழ்க்கை துணை தேவை என்பதை உணர்ந்து கொண்டார்.

அவர் தனது தீவிர முயற்சிக்கு பிறகு தாயை சமாதானம் செய்து அவரை மாருதி கன்வத் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்து உள்ளார். தாயின் மறுமணம் குறித்து மகன் யுவராஜ் கூறியதாவது:- 18 வயதில் தந்தையை இழந்தது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் அவரின் மறைவு எனது தாய்க்கு பேரிழப்பாக இருந்தது. அவர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் தவித்தார். எனது தாய் 25 ஆண்டுகளாக தந்தையுடன் திருமண பந்தத்தில் இருந்தார். ஒரு ஆண் மனைவியை இழக்கும் போது, அவர் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என சமூகம் நினைக்கிறது.

ஆனால் அதே ஒரு பெண் கணவரை இழந்தால் மட்டும் சமூகம் ஏன் அவரும் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என உணர மறுக்கிறது என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எனவே தான் எனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். அதற்கு அவரை கடும் முயற்சிக்கு பிறகு சம்மதிக்கவும் வைத்தேன். கோலாப்பூர் போன்ற பாரம்பரிய மிக்க ஊரில் இதுபோன்ற மறுமணத்திற்கு குடும்பத்தினர், உறவினர்களை சம்மதிக்க வைப்பது எளிதானது அல்ல. நண்பர்கள், உறவினர்களுடன் தாய்க்கு பொருத்தமானவரை தேடினேன். அதிர்ஷ்டவசமாக மாருதி கன்வத் குறித்து எங்களுக்கு தெரியவந்தது. அவருடன் மறுமணம் பற்றி பேசினோம். அவர் ஒப்புக்கொண்ட பிறகு திருமணம் முடிவு செய்யப்பட்டது.

எனது தாய்க்கு பொருத்தமானவரை தேடி கண்டுபிடித்ததால் அந்த நாள் எனக்கு சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்தது. இவ்வாறு அவர் மகிழ்ச்சி பொங்க கூறினார். இது குறித்து மாருதி கன்வத் கூறுகையில், ”நான் கடந்த சில ஆண்டுகளாக தனியாக தான் வாழ்ந்து வந்தேன். ரத்னாவை சந்தித்து அவருடன் பேசிய பிறகு தான் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்கள் உண்மையானவர்கள்” என்றார். மறுமணம் செய்த வாலிபரின் தாய் ரத்னா கூறுகையில், ”ஆரம்பத்தில் எனக்கு மறுமணத்தில் விருப்பம் இல்லை.

எனது கணவரை மறக்க நான் தயாராக இல்லை. ஆனால் பல விஷயங்கள் குறித்து பேசிய பிறகு சமாதானம் அடைந்தேன். வாழ்நாள் முழுவதும் இனிமேல் தனியாகவே வாழப்போகிறாயா என எனக்குள் நானே கேட்டு கொண்டேன். இறுதியில் மறுமணத்திற்கு சம்மதித்தேன்” என்றார். விதவை தாய்க்கு மகனே நடத்தி வைத்த திருமணத்துக்கு வந்தவர்கள் சீர்திருத்த கல்யாண தம்பதியை மனதார வாழ்த்தி சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.