பிரதமர் செயலக சிறப்பு திட்ட பணிப்பாளர்போல் நடித்து பணமோசடியில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பில் தகவல்கள்!
பிரதமர் செயலகத்தின் சிறப்பு திட்ட பணிப்பாளர்போல் நடித்து இளைஞர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் செயலகத்தில் அவ்வாறானதொரு பதவியை வகிக்காத இவர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இவ்வாறு கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இவ்வாறான பண மோசடி தொடர்பான பல வழக்குகள் தொடர்பிலும் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளை லுணுகல பிரதேசத்துக்குச் சென்ற இவர், அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவரை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்.
அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த இளைஞர் இரண்டு நாட்களுக்கான உணவு மற்றும் அறை வாடகைக்கு 36,000 ரூபாயை செலுத்த தவறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.