கேகாலையில் உயர்தர பரீட்சைக்குச் சென்ற மாணவி மீது எசிட் தாக்குதலை மேற்கொள்ள முயற்சி!
கேகாலை நகரில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் மீது இளைஞர் ஒருவரால் எசிட் தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
பரணகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளொன்றில் வந்து , தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த மாணவியை இடை மறித்து எசிட் தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
இதன் போது ஏற்பட்ட மோதலால் தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த இளைஞன், பாடசாலை மாணவி மற்றும் அவரது தந்தை ஆகியோர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெட்டுமுல்ல உடுமாகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி, 45 வயதுடைய அவருடை தந்தை மற்றும் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தனது தந்தையின் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த மாணவியின் கழுத்தை நெறித்து அவர் மீது எசிட் தாக்குதலை மேற்கொள்ள சந்தேகநபரான இளைஞன் முயற்சித்த போது , அவரை தடுப்பதற்காக மாணவியின் தந்தை முயற்சித்த போதே மூவரும் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு மாணவி மீது எசிட் தாக்குதலை மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.