மணிக்கு 160 கி.மீ வேகம் | இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்: சோதனை ஓட்டத்தில் RRTS சாதனை!!
இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் என்று அழைக்கப்படும் ஆர்ஆர்டிஎஸ் (RRTS) ரயில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு தொழில்நுட்பங்களில் புதிய வகையில் ரயில்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. தற்போது இந்தியாவின் அதிக வேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்க கூடிய RRTS என்று அழைக்கப்படும் Regional Rapid Transit System என்ற முறையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
இது இந்தியாவின் அதிக வேக மெட்ரோ ரயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் வேகத்தை விட 3 மடங்கு அதிக வேகத்தில் இதை இயக்க முடியும். மெட்ரோ ரயில் போன்று, இதுவும் உயர்மட்ட வழித்தடம் மற்றும் சுரங்கம் வழியாக இயக்கப்படும்.
இதன்படி முதல் கட்ட ஆர்ஆர்டிஎஸ் திட்டம் டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 82 கிமீ நீளத்திற்கு ரூ.30,274 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை தேசிய தலைநகர் பகுதியின் பிராந்திய போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்களும், 2 பனிமனைகளும் உள்ளன. இதில் 68.03 கி.மீ நிளத்திற்கு உயர்மட்ட பாதையாகவும், 14.12 சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆர்ஆர்டிஎஸ் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதன்படி துஹாய் டிப்போ முதல் காசியாபாத் இடையே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்சார சோதனையை செய்ய இந்த சோதனை ஓட்டம் நடைபெற்துள்ளது. இதன்படி 17 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இந்த ரயில் பயணித்துள்ளது. இந்நிலையில், வரும் நாட்களில் முறையான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
இதன்படி முன்னூரிமை வழித்தடமான துஹாய் டிப்போ முதல் காசியாபாத் வழித்தடத்தில் வரும் மார்ச் மாதம் மூலம் ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் வழித்தடத்தில் 2025-ம் ஆண்டுக்குள் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.