‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசியல் சாசனத்திற்கு எதிரானது: ஆம் ஆத்மி கட்சி!!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற மத்திய அரசின் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அட்டிஷி, ”இந்தத் திட்டம் பாஜகவின் சதி. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, பொருட்களை விற்பது வாங்குவது போல் மாற்றுவதையும், அதை சட்டபூர்வமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது இது.
நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாற்றாக அதிபர் முறையை கொண்டு வர வேண்டும் எனும் நோக்கோடு இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்து வருகிறார். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், எம்எல்ஏக்கள் / எம்பிக்கள் முதல்வரை / பிரதமரை கட்சியின் கட்டுப்பாடு இன்றி விருப்பம்போல் தேர்வு செய்ய இது வழிவகுக்கும். அதிக பணமும் அதிக அதிகாரமும் கொண்ட கட்சியின் கைகளிடம் நாட்டை ஒப்படைப்பதாகவே இது இருக்கும்.
சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால், மக்கள் பிரச்சினைகள் பேசுபொருளாக இல்லாமல் போய்விடும். பணமும் அதிகாரமுமே அனைத்தையும் கட்டுப்படுத்தும். அத்தகைய சூழலில் ஜனநாயக முறை என்பது மறைந்து பணம் மற்றும் அதிகாரத்தின் விளையாட்டாக அது மாறிவிடும்” என குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான தனது 12 பக்க அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி தேசிய சட்ட ஆணையத்திடம் வழங்கி உள்ளது. அதில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை அமலானால் ஏற்படும் பாதிப்புகளை அது பட்டியல் இட்டுள்ளது.