“பசுஞ் சாணம் பூசப்பட்ட வீட்டை கதிர்வீச்சு கூட தாக்காது” – குஜராத் நீதிபதி கருத்து!!
பசுவின் சாணம் பூசப்பட்ட வீட்டில் கதிர்வீச்சு கூட தாக்காது என்று குஜராத் மாநில செசன்ஸ் கோர்ட் நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.
குஜராத் மாநிலம் தாபி மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி சமீர் வியாஸ். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர் பசு கடத்தல் வழக்கு ஒன்றை விசாரித்தார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பசுக்களையும், எருதுகளையும் கடத்திய அவருக்கு பல்வேறு சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டு நிரூபணமானதாகக் கூறி ஆயுள் தண்டனை விதித்தார் நீதிபதி. அவர் அப்போது வழங்கிய தீர்ப்பின் முழுவிவரம் அண்மையில் வெளியானது. அந்த தீர்ப்பில் நீதிபதி, பசு நம் தாய். அதை வதைப்பது சரியல்ல. அறிவியல் ரீதியாக வீட்டில் பசு சாணம் பூசியிருந்தால் அங்கு கதிர்வீச்சு பாதிப்பு கூட அண்டாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுவின் கோமியம் பல தீரா நோய்களை குணப்படுத்தவல்லது. இந்த பூமியின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் நாள் எதுவென்றால் பசுவின் ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே சிந்தாத நாள் தான். பசு பாதுகாப்பு பற்றி நாம் நிறைய பேசினாலும் கூட அது முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஒரு பண்பட்ட சமூகத்திற்கு இது அவமானம். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இங்கே பசுவதை குறைந்தபாடில்லை. பசு என்பது மத அடையாளம். பசு சார்ந்த இயற்கை விவசாய முறையை பின்பற்றி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் நம்மை பல்வேறு நோய்களில் இருந்தும் காப்பாற்றும். அறிவியல் ரீதியாக வீட்டில் பசு சாணம் பூசியிருந்தால் அங்கு கதிர்வீச்சு பாதிப்பு கூட அண்டாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுக்கள் இன்று அபாயத்தில் இருக்கின்றன. இயந்திர வதைகூடங்களில் பசுக்கள் வதைக்கப்பட்டு அசைவ உணவு உண்பவர்களுக்கு ஆட்டிறைச்சியுடன் கலந்து விற்கப்படுகிறது என்றார்.
பசுக்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்க நான் சில சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கூறுகிறேன். இந்த ஸ்லோகத்தின் சாராம்சம், மதம் என்பது பசுவில் இருந்துதான் பிறந்தது. ஏனெனில் மதம் ரிஷபத்தின் வடிவமே. ரிஷபம் (எருது) என்பது பசுவின் மகன். பசுக்களை சட்டவிரோதமாக கடத்தி அவற்றை வதைப்பது வேதனை தருகிறது. இந்தியாவின் கால்நடை எண்ணிக்கையில் 75 சதவீதம் ஏற்கெனவே குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.