எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் (ஊரக) எஸ்எஸ்பி ஸ்வபன் சர்மா நேற்று கூறியதாவது: கடந்த 21-ம் தேதி இரவு பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் ட்ரோன் நுழைய முயன்றதைப் பார்த்த போலீஸார் பிஎஸ்எப் வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த ட்ரோனை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். மேலும் அதிலிருந்த 5 கிலோ ஹெராயினையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு சர்மா கூறினார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன், அமெரிக்கா மற்றும் சீனாவின் உதிரி பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. கேமரா மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட இதன் விலை ரூ.10 லட்சம். சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்ற 2 பேரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் 21, 23 மற்றும் 28 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநில எல்லைகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் ட்ரோன் மூலம் போதைப்பொருட்களை விநியோகம் செய்ய முயன்று வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்குள்ளாக போதைப்பொருட்களை விநியோகிக்க முயன்றபோது சுட்டு வீழ்த்தப்பட்ட 6-வது ட்ரோன் இது என்பது குறிப்பிடத்தக்கது.