அவசரகால சுகாதார தேவையை எதிர்கொள்ள பயிற்சி – முதல் பயிற்சிப் பட்டறை தொடக்கம்!!
நாட்டின் அவசரகால சுகாதார தேவையை எதிர்கொள்வதற்கான முதல் பயிற்சிப் பட்டறையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கிவைத்தார்.
இயற்கைப் பேரிடரைப் போன்று சுகாதார பேரிடர் நேரிடுமானால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் முதல் பயிற்சிப் பட்டறை டெல்லியில் இன்று தொடங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்.
மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர், மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணை செயலாளர், மத்திய சுகாதாரத் திட்டத்தின் இயக்குநர், சுகாதார சேவைகளின் இயக்குநர், மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமை செயலாளர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் இயக்குநர்கள், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய சுகாதார பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய முப்படைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
தேசிய அவசரகால சுகாதாரக் குழு சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சிப் பட்டறையை தொடங்கிவைத்துப் பேசிய மண்சுக் மாண்டவியா, நாட்டில் சுகாதார அவசர நிலை ஏற்பட்டால் அதை எவ்வாறு ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்பது குறித்து விவரித்தார். நாட்டின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைவதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், திட்டங்களை செயல்படுத்துவதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
இதுபோன்ற ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்படுவது இதுவே முதல்முறை என தெரிவித்த மண்சுக் மாண்டவியா, இதுபோன்ற பயிற்சிப் பட்டறைகள் பல்வேறு மட்டங்களில் தேசிய அவசரகால சுகாதாரக் குழு சார்பில் தொடர்ந்து நடத்தப்படும் என குறிப்பிட்டார்.