சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாற்றுத்திறனாளி பயிற்றுனர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்!!
தமிழக மாற்றுத்திறனாளிகள் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பயிற்றுனர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சாப்பிடாமல் இருந்து வரும் ஆசிரியர்கள் மிகவும் சோர்வடைந்தனர். 4 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
போராட்டம் குறித்து பயிற்றுனர்கள் கூறியதாவது:- அரசு, உதவிபெறும் மாற்றுத்திறனாளி பயிற்றுனர்களாகிய நாங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுனர்களாக பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு 1,600 ஆசிரியர்கள் மட்டுமே கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஆட்சியிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டவர்.
அவர் எங்கள் நிலையை அறிந்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 18 மாதமாக அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்து விளக்கி வருகிறோம். ஆனால் இதுவரையில் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.