பாஸ்டேக் வசதி மூலம் கடந்த ஆண்டு ரூ.50,855 கோடி சுங்க கட்டணம் வசூல்!!
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து பாஸ்டேக் வாயிலாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
அதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும் வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் பெருமளவில் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கடந்த ஆண்டில் சுங்க கட்டணம் மூலமாக வசூல் செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, பாஸ்டேக் வாயிலான வருவாய் ரூ.50,855 கோடியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் அந்த வருவாய் ரூ.34,778 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாஸ்டேக் வாயிலான பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் ரூ.219 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் ரூ.324 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஒட்டு மொத்தமாக 6.4 கோடி பாஸ்டேக் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பாஸ்டேக் வசதியுடன் செயல்படும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டில் 922-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 1,181-ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 323 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.134.44 கோடி வசூலானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டிசம்பர் 24-ந் தேதி ரூ.144.19 கோடி வசூலானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.