பாகிஸ்தானில் மின்வெட்டு: மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ஷபாஸ் ஷெரீப்!!
பாகிஸ்தானில் மின்பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், பொருளாதார நகரமான கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் பரிதவிப்புக்கு ஆளாகினர். கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை நாடு முழுவதும் மின்இணைப்பு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மின்வெட்டு காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நமது குடிமக்கள் அனுபவித்த சிரமத்திற்கு எனது அரசாங்கத்தின் சார்பாக நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உத்தரவின் பேரில் மின்வெட்டுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.