ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை- காதல் திருமண விவகாரத்தில் விபரீதம்!!
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் தவுன்ட் தாலுகா யவத் கிராம பகுதியில் உள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தொடர்ந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில் நேற்று மேலும் 3 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டன. பிணமாக மீட்கப்பட்டவர்கள் காம்காவ் பகுதியை சேர்ந்த மோகன் உத்தம் பவார் (வயது 50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என்பது தெரியவந்தது. மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அந்த பெண்ணுடன் எங்கோ ஓடிவிட்டது தெரியவந்தது.
இந்தநிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மகன் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்து மோகன் உத்தம் பவார் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தார்களா? அல்லது யாராலும் மிரட்டப்பட்டதால் இந்த துயர முடிவை எடுத்தார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.