எகிப்து அதிபர் இந்தியா வருகை: நாட்டுப்புற நடனத்துடன் உற்சாக வரவேற்பு!!
தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி (68) கலந்துகொள்கிறார். இதற்காக மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்து சேர்ந்தார். எகிப்து அதிபருடன் 5 மந்திரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் வந்துள்ளனர்.
டெல்லி விமான நிலையம் வந்தடைந்த எகிப்து அதிபருக்கு பாரம்பரிய நாட்டுப்புற நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு நாளை ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. எகிப்து அதிபர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடக்கும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் எகிப்து அதிபர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளார்.
நாளை மாலை அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்து கவுரவிக்கிறார். இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை ஆகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது.