கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து- விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பு !!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குடியரசு நாளில் (நாளை) கவர்னர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள கவர்னருக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
அதேவேளையில், அவ்விருந்தில் பங்கேற்பதை தவிர்ப்பது என முடிவு செய்திருக்கிறோம். அத்துடன், தமிழ்நாடு கவர்னரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். அவர் கவர்னர் என்கிற முறையில் தனது பொறுப்பையுணர்ந்து அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுகிறாரா? என்பதும் கேள்விக்குறியாகவுள்ளது. அவருடைய செயல்பாடுகள் பெரும்பாலும் வெளிப்படையாகவே அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவையாக இருக்கின்றன.
கவர்னரின் இத்தகைய போக்கைக் கண்டித்து அவரது அழைப்பை புறக்கணிப்பது என விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு நலன்களை கருத்தில் கொண்டும், மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டும் தற்போதைய கவர்னரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், தமிழ்நாடு அரசுக்கு இணக்கமான வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.