மின்தடையில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் பாகிஸ்தான்!!
“மின்தடையில் இருந்து பாகிஸ்தான் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது,’’ என்று பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்தார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், மின்சார துறையும் கடனில் உள்ளது. இதனால் தேவையான மின் இணைப்புகளில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மின்வெட்டினால் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா உள்ளிட்ட பெரும்பாலான மாகாணங்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக இருளில் மூழ்கின.
மின்தொகுப்புகளில் ஏற்பட்ட சீரற்ற மின் விநியோகத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் நேற்று முன்தின இரவுக்குள் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மின்தடை படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறிய போது, “மின்தடையில் இருந்து பாகிஸ்தான் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. முற்றிலும் சீரமைக்க 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரையிலாகும்,’’ என்று தெரிவித்தார்.
* பிரதமர் மன்னிப்பு
மின்வெட்டு குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது டிவிட்டரில், “நேற்றைய மின்வெட்டினால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு அரசின் சார்பில் மன்னிப்பு தெரிவித்து கொள்கிறேன். மின் துண்டிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும்,’’ என்று கூறியுள்ளார்.