எகிப்து அதிபர்- பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
நாட்டில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் (1950, ஜனவரி 26-ந் தேதி) குடியரசு தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா நாளை (26-ந்தேதி) கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகைகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன.
குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (வயது68) கலந்து கொள்கிறார். இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படை பிரிவும் கலந்துகொள்கிறது. குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு மத்திய வெளியுறவு துறை ராஜாங்க மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் பாரம்பரிய நாட்டுபுற நடனமும் இடம்பெற்றது. எகிப்து அதிபருடன் அந்நாட்டின் 5 மந்திரிகளும், உயர்மட்டக் தூதுக்குழுவும் வந்துள்ளது. இந்த நிலையில் எகிப்து அதிபர் சிசிக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி பேண்டு வாத்தியம் மற்றும் வீரர்களின் அணிவகுப்புகளுடன் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. எகிப்து அதிபர் சிசியை ஜனாதிபதி திரவுபதி முர்மு கை குலுக்கி வரவேற்றார்.
அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இருவரும் கை குலுக்கி கொண்டனர். மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பின்னர் எகிப்து மந்திரிகள் மற்றும் குழுவினர் ஜனாதிபதி மற்றும் மோடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்த வரவேற்புக்கு எகிப்து அதிபர் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதன்பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் சிசி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளும் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக பேசப்பட்டது. இதையடுத்து, 75 ஆண்டு கால நட்புறவை நினைவுகூரும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடியும் எகிப்து அதிபர் அல் சிசியும் இணைந்து வெளியிட்டனர். மேலும் இரு நாடுகளுக்கு இடையே கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.