74-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்- தேசிய கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!
நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில் (முன்பு ராஜ பாதை) குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டு தலைவரை வரவழைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். எகிப்து அதிபர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றிய பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை செல்கிறது.