சபரிமலையில் ரூ.82 கோடி வருமானம் அதிகரிப்பு- நாணயங்கள் முழுமையாக எண்ணி முடித்தபிறகு மேலும் உயரும்!!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்தவர்கள் தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகமாகவே இருந்தது. இதனால் தரிசனத்திற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை போன்றவற்றின் மூலம் சபரிமலை கோவிலுக்கு இந்த ஆண்டு வருவாய் அதிகரித்தது. அதிலும் சபரிமலை வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் ரூ.351 வருமானம் கிடைத்துள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ஆனந்தகோபன் கூறியதாவது:- சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதன்மூலம் இந்த ஆண்டு ரூ.351 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கொரோனாவிற்கு முன்பு சபரிமலை கோவிலில் இந்த சீசனில் ரூ.269 கோடி தான் பெறப்பட்டு இருந்தது. எனவே இந்த ஆண்டு கூடுதலாக ரூ.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதற்கிடையில் காணிக்கை நாணயங்கள் எண்ணும் பணி இன்னும் முடியவில்லை. நான்கில் ஒரு பங்கு மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளது. தொடர்ந்து 70 நாட்களாக நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சோர்வு அடைந்ததால், அவர்களுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நாணயங்கள் எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதி முதல் நாணயங்கள் எண்ணும் பணி மீண்டும் தொடரும். காணிக்கை உண்டியல்களில் ரூ.20 கோடிக்கும் அதிகமான நாணயங்கள் கிடைத்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக எண்ணி முடித்தபிறகு, கோவிலின் வருவாய் மேலும் உயரும். கோவிலில் கிடைத்த வருமானத்தில் 40 சதவீதம் செலவுக்கு பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள பணம் வாரியத்திடம் ஓப்படைக்கப்படும். சபரிமலையில் அடுத்த சீசனுக்கு முன்பாக முன்வரிசை வளாகம் நவீனப்படுத்தப்படும்.
ரோப்வேக்கு நிலம் கொடுப்பதற்கு பதிலாக அடிமாலியில் உள்ள நிலம் வனத்துறைக்கு வழங்கப்படும். வன நிலம் கிடைத்ததும், ரோப்வே அமைக்கும் பணி தொடங்கும். நிலக்கல் பகுதியில் ரூ.15 கோடியில் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.