மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி: பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு !!
பெங்களூரு போலீசில் காங்கிரஸ் தலைவர்கள் என் மீதும், ரமேஷ் ஜார்கிகோளி மீதும் புகார் அளித்துள்ளனர். ரமேஷ் ஜார்கிகோளி, வாக்காளர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக கூறியதாக அவர்கள் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி, மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது என்ன?. காங்கிரஸ் தலைவர்கள் குற்றவாளிகள் இல்லையா?. 4, 5 எம்.எல்.ஏ.க்கள் வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கியுள்ளனர்.
அதில் அவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து வணிக வரி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரசார் செய்து வந்தாலும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அக்கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். தேர்தலில் தோல்வி உறுதி என்பதால், எங்கள் மீது புகார் அளிப்பது, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது போன்ற செயல்களில் காங்கிரசார் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் இருக்கிறார்கள். காங்கிரசாரின் புகார் குறித்து சட்டப்படி விசாரணை நடைபெறட்டும். நாங்கள் காங்கிரசாரிடம் இருந்து பாடம் கற்க தேவை இல்லை.
அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்யட்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். அவர்களின் ஆட்சி காலத்தில் தவறுகள் நடந்ததால் தான் காங்கிரஸ் கட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். பா.ஜனதா தான் ஏ அணி என்பதை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் ஒப்பு கொள்கிறார்கள். நாட்டில் முதல் முறையாக ஊழலை தொடங்கி வைத்தது காங்கிரஸ் தான்.
அதாவது ராணுவத்திற்கு ஜீப்புகள் வாங்கியதில் ஊழல் நடந்தது. இதனால் அப்போதைய ராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஊழல், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிக்க முடியாத அங்கம். டி.கே.சிவக்குமார் மிகவும் சுத்தமான மனிதர். அரசியலில் அவரை போன்ற சுத்தமான மனிதர் வேறு யாரும் இல்லை. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.