;
Athirady Tamil News

அரச வங்கியில் ரூ.2கோடி பெறுமதியான நகைகள் மாயம் !!

0

அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே இவ்வாறு மாயமாகியுள்ளன.

கடனைப் பெறுவதற்காக அடகு வைக்கப்பட்ட தங்கப் நகைகளுக்கான வட்டியை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, ​​அவர் அடகு வைத்திருந்த தங்க நகை காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் மட்டக்களப்பு தலைமை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையினை மேற்கொண்டனர்.

​​அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களைத் தவிர, வாடிக்கையாளர், மற்ற 12 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் அடங்கிய பொதிகளையும் காணவில்லை என கண்டறியப்பட்டது.

2022 ஜனவரி முதல் டிசெம்பர் வரை அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள தங்க நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் வசம் இருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.