சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!!
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி விலகியுள்ளமை உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிகேவ தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பதவி விலகல் குறித்து இன்னமும் எங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் ஒரு உறுப்பினர் பதவி விலகியமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களில் இராஜினாமா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன எனினும் எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள நிமால் புஞ்சிகேவ எங்களுக்கு குறிப்பிட்ட உறுப்பினரோ அல்லது உரிய அதிகாரசபையோ இது குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சார்ள்ஸ் பதவி விலகல் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இதன் காரணமாக உள்ளுராட்சி தேர்தல்கள் தாமதமாகலாம் என்ற கருத்தும் உருவாகியுள்ளது.
எனினும் ஐந்து உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணைக்குழுவினால் ஆகக்குறைந்தது மூன்று உறுப்பினர்களுடன் பணியாற்ற முடியும். சார்ள்ஸின் பதவி இராஜினாமா தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்காது என புஞ்சிகேவ தெரிவித்துள்ளார்.