;
Athirady Tamil News

தென் கொரிய தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!! (படங்கள்)

0

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தென்கொரியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் தென்கொரியாவின் துறைசார் தொழில்நுட்ப அனுபங்களை உள்வாங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் கடலுணவுகளை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.

இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் சன்தூஸ் வூன்ஜின் ஜிஒன்ங், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று (26) சந்தித்து கலந்துரையாடிய போதே குறித்த விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், நீர்வேளாண்மை சார் உற்பத்தியில் தென்கொரியாவின் அடைவுகளை பாராட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயிரியல்சார் தொழில்நுட்பம் மற்றும் கடலுணவுகளை பண்ணை முறையில் இனப் பெருக்கம் செய்வதற்கான தொழில்நுட்பம், போன்றவற்றில் தென்கொரியாவிற்கு இருக்கின்ற அனுபவங்களை உள்வாங்குவதற்கும் பயிற்சி நிலையங்களை இலங்கையில் அமைப்பதற்குமான ஆர்வத்தினை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று, மீன் உணவுகளை உற்பத்தி செய்தல், கருவாடுகளை உற்பத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப முறைமைகள், மீன்கள் செறிந்து காணப்படும் பிரதேசங்களை கடற்றொழிலாளர்கள் இலகுவாக அறிந்து கொள்வதற்கான கருவிகளை கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்கான ஒத்துழைப்புகள் போன்ற கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கு சாத்தியமான பல்வேறு விடயங்களை தென்கொரியாவிடம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான தென் கொரிய தூதுவர், கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து முடிந்தளவு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்ததுடன் தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு கடற்றொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பாக தெரிவித்தார்.

இதனை வரவேற்ற கடற்றொழில் அமைச்சர், கொரிய மொழிப் பயிற்சி நிலையங்களை வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் விஸ்தரிப்பதற்கும் பல்கலைக் கழங்கள் ஊடாக கடற்றொழில்சார் கற்கை நெறிகளையும் கொரிய மொழியுடன் இணைத்து முன்னெடுப்பதும் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்தினையும் முன்வைத்தார்.

அத்துடன், இலங்கை கடலுணவுகளுக்கான சிறந்த ஏற்றுமதிச் சந்தையாக தென்கொரியா விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேரடியாக தென்கொரியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (தொழில்நுட்பம்) தம்மிக்க ரணதுங்க, கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர்களான எஸ். தவராசார மற்றும் பேராசிரியர் நவரட்ணராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.