ஈரோடு இடைத்தேர்தல்- தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார். அதே போல் ஓ.பி.எஸ்.சும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து உள்ளார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவில் 106 நிர்வாகிகளை நியமித்து அதிமுக அறிவித்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசிக்க உள்ளார்.