செய்மதிகளைவிட பூமியை நெருக்கமாக கடந்து செல்லவுள்ள விண்கல்: நாசா தெரிவிப்பு!!
ஒரு பஸ் அளவிலான விண்கல். இன்னும் சில மணித்தியாலங்களில் பூமியை சுமார் 3,600 கிலோமீற்றர்கள்; (2,200 மைல்கள்) தொலைவில் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
பல செய்மதிகளைவிட இந்த விண்கல் பூமியை நெருங்கிச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது.
2023 BU (2023 பியூ) என இவ்விண்கல்லுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூர் விண்வெளி அவதானிப்பாளரான கென்னடி போரிசோ என்பவரால் கடந்த வாரமே இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை குறித்து அறியப்பட்டது.
இன்னும் கண்டுபிடிக்கப்படாத சிறிய அளவிலான பல விண்கற்கள் பூமிக்கு அருகில் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
இவ்விண்கல்லானது தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் முனையை அமெரிக்காவின் கிழக்குப் பிராந்திய நேரப்படி 26 ஆம் திகதி இரவு 7.27 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி 27 ஆம் திகதி வெள்ளி காலை 5.57 மணிக்கு, ஜிஎம்ரி நேரப்படி வெள்ளி அதிகாலை 00.27 மணிக்கு) 3,600 கிலோமீற்றர்கள் தொலைவில் நெருங்கிச் செல்லும்.
உலகின் சில செய்மதிகள் பூமியிலிருந்து 36,000 கிலோமீற்றர்கள் உயரத்திலும் பூமியை வலம் வருகின்றன. இச்செய்மதிகளுடன் ஒப்பிடும்போது மேற்படி விண்கல் சுமார் 10 மடங்கு நெருக்கமாக கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கல் 3.5 முதல் 8.5 மீற்றர் (11.5 முதல் 28 அடி) நீளமானதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவிலான விண்கல் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தால் அதன் பெரும்பகுதி எரிந்துவிடும் என நாசா தெரிவித்துள்ளது.
பூமியின் ஈர்ப்புச் சக்தியானது இந்த விண்கல்லின் சுற்றுப்பாதையை மாற்றிவிடும் என நாசா தெரிவித்துள்ளது.
பூமிக்கு அருகில் வருவதற்கு முன் அதன் சுற்றுப்பாதையானது ஏறத்தாழ வட்டமாக இருக்கும். சூரியனை சுற்றிவருவதற்கு அது சுமார் 359 நாட்களை எடுத்துக்கொள்கிறது.
ஆனால், பூமியை நெருங்கி வருவதால் புவியீர்ப்பு விசையினால் அதன் பயணப்பாதை நீள்வட்டமாக மாறிவிடும். பின்னர் அது 425 நாட்களுக்கு ஒரு தடவை பூமியை சுற்றிவரும் என நாசா தெரிவித்துள்ளது.