ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்களில் வன்முறையை தூண்டும் சம்பவங்கள் – இந்திய தூதரகம் கண்டனம்!!
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில், சமூக விரோதிகள் சிலர் கடந்த 12-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதினர். இதேபோல் விக்டோரியா பகுதியில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலிலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் கடந்த 16-ம் தேதி எழுதப்பட்டன. இந்நிலையில் ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள இஸ்கான் கோயில் சுவரில் ‘காலிஸ்தான் வாழ்க, இந்துஸ்தான் ஒழிக’என்ற வாசகங்கள் எழுதப்பட்டன.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது: மெல்பர்னில் உள்ள 3 இந்து கோயில்களில் வன்முறையை தூண்டும் செயல்கள் சமீபத்தில்நிகழ்ந்துள்ளன.
இச்சம்பவங்கள் இந்திய-ஆஸ்திரேலிய சமுதாயத்தினர் இடையே வெறுப்பையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் முயற்சிகள் என தெளிவாக தெரிகின்றன. காலிஸ்தான் ஆதரவாளர்கள், ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்எப்ஜே) போன்ற அமைப்புகள் ஆஸ்திரேலியாவுக்கு வெளியிலிருந்து உதவுகின்றன. இது குறித்த இந்தியாவின் கவலையை ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்துள்ளோம். இந்த முயற்சிகளை தடுக்க ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.