‘காப்பியடித்தல்’ பாதிப்பு முதல் கடின உழைப்பு வரை: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!!
தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்று ’ தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின் மிகப் பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி இன்று (ஜன 27-ம் தேதி) நடைபெற்றது.
டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் இருந்து பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு காணொலி வாயிலாக பதில் அளிக்கிறார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் பிரதமரின் பதில்களும் பற்றிய தொகுப்பு:
கேள்வி: எனது தேர்வு முடிவுகள் நன்றாக இல்லை என்றால் என் குடும்பத்தை நான் எப்படி எதிர்கொள்வது?
பிரதமர் பதில்: குடும்பத்தினரின் எதிர்பார்பு இயல்பானதுதான். ஆனால் மாணவரின் தேர்வு வெற்றியை ஒரு குடும்பம் சமூக அந்தஸ்தாக கருதினால் அது ஆரோக்கியமானது அல்ல.
கேள்வி: தேர்வுக்கு தயாராகும்போது எங்கு தொடங்குவது என்பதே குழப்பமாக இருக்கிறது. நேர மேலாண்மை கடினமாக இருக்கிறது. அதை எப்படி கையாள்வது?
பிரதமர் பதில்: நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல உங்கள் அன்றாட வாழ்வுக்கே முக்கியமானது. அதனால் உங்கள் வேலைகளில் எது முக்கியமானது என்று வரிசைப்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உங்கள் தாயார் எப்படி நேர மேலாண்மை செய்கிறார் என்று கண்காணியுங்கள். அவர்களிடமிருந்தே நீங்கள் உங்கள் பாடத்திற்கு நேர மேலாண்மையை கற்றுக் கொள்ளலாம்.
கேள்வி: தேர்வில் காப்பியடித்தல் போன்ற தவறுகளைத் தவிர்ப்பது எப்படி?
பிரதமர் பதில்: சிலர் ஏமாற்றுவதற்கே நூதன முறைகளைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அதே மாணவர்கள் தங்களின் நேரத்தையும், ஆக்க சக்தியையும் நல்ல விதத்தில் பயன்படுத்தினாலே வெற்றி வரும். ஏமாற்றும் மாணவர்களால் பாதிக்கப்படுவது கடினமாக உழைக்கும் மாணவர்கள்தான். அதனால் கடினமாக உழைக்கும் மாணவர்கள் யாரும் ஏமாற்றுபவர்களை பார்த்து பாதையை மாற்ற வேண்டாம். உங்கள் வலிமை உங்களை முன்னேற்றும் என்று உறுதியாகக் கூறுகிறேன்.
கேள்வி: கடின உழைப்பு, சாமர்த்தியமான உழைப்பு இதில் எது சிறந்தது?
பிரதமர் பதில்: நீங்கள் தாகம் நிறைந்த காகம் பற்றிய கதையைக் கேட்டிருப்பீர்கள்தானே. அந்தக் காகம் தாகத்தைப் போக்க மேற்கொண்ட முயற்சியை கடின உழைப்பு என்பீர்களா அல்லது சாமர்த்தியம் என்பீர்களா? சிலர் கடினமாக உழைப்பீர்கள். சிலர் சாமர்த்தியாக உழைப்பார்கள். ஆனால் சிலர் ஏதும் செய்ய மாட்டார்கள். தேர்வு நேரத்தில் நீங்கள் கடின உழைப்பை செலுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்கு பலன் தரும்.
கேள்வி: நான் ஒரு சராசரி மாணவர்? நான் எப்படி என் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்?
பிரதமர் பதில்: நீங்கள் ஒரு சராசரி மாணவர் என்பதை தெரிந்து வைத்துள்ளதற்கு வாழ்த்துகள். நிறைய மாணவர்கள் தங்களைத் தாங்களே கூட்டி மதிப்பிட்டு வைத்திருப்பார்கள். நம்மை நாம் அறிந்திருந்தால் போதும் அசாத்தியமான செயல்களைக் கூட முயன்று சாதிக்கலாம்.
கேள்வி: எதிர் தரப்பினரின் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது?
பிரதமர் பதில்: விமர்சனங்கள் என்பது ஜனநாயகத்தின் அடிநாதம். அதுவே வெற்றிகரமான ஜனநாயகத்திற்கு வழி.
கேள்வி: தேர்வு வேளைகளில் எப்படி சமூக ஊடகங்கள், ஆன்லைனில் விளையாட்டுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது?
பிரதமர் பதில்: முதலில் நீங்கள் சாமர்த்தியமானவரா அல்லது கேட்ஜட் சாமர்த்தியமானதா என்று முடிவு செய்யுங்கள். மின்னணு சாதனங்கள் உங்களைவிட ஸ்மார்ட் ஆனவை அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எப்போதுமே மின்னணு சாதனங்கள், தொழில்நுட்பங்களுக்கு நாம் அடிமையாகிவிடக் கூடாது.
இவ்வாறு பிரதமர் மோடி, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.