டெல்லி மேயர் தேர்தலுக்கு காலக்கெடு – உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கோரிக்கை!!
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலை காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர்.
ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும் துணைமேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மை பெற்றுள்ளபோதிலும் பாஜகவும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவித்தது.
இதையடுத்து புதிய மாமன்ற கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட 10 நியமன உறுப்பினர்கள் முதலில் பதவியேற்க ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஏற்பட்ட அமளியால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லி மாமன்றக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மீண்டும் தொடங்கியது.
இதில் ஆம் ஆத்மியின் எதிர்ப்புக்கு மத்தியில் 10 நியமன உறுப்பினர்களும் முதலில் பதவியேற்றனர். பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
சூடான வாக்குவாதம்: இதையடுத்து, பாஜக, ஆம்ஆத்மி உறுப்பினர்கள் இடையேசூடான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் அமளி நிலவியதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலை காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவை நடவடிக்கைகளை பாஜகவினர் திட்டமிட்டு சீர்குலைப்பதாக ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் நேற்று கூறும்போது, “ஆம் ஆத்மி உறுப்பினர்களின் அமளி காரணமாகவே 2 கூட்டங்களிலும் மேயர் தேர்தலை நடத்த முடியவில்லை. டெல்லி மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதை அர்விந்த் கேஜ்ரிவால் விரும்பவில்லை. தன்னை விட மேயர் அதிக பிரபலம் அடைந்துவிடுவார் என கேஜ்ரிவால் அஞ்சுவதே இதற்கு காரணம்” என்றார்.
ஆளுநர் அழைப்பு: டெல்லியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்கு பின்லாந்து அனுப்புவது உட்பட பல்வேறு விவகாரங்களில் கேஜ்ரிவால்அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கேபினட் அமைச்சர்கள், ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்எல்ஏக்களுடன் வெள்ளிக்கிழமை (இன்று) தன்னைவந்து சந்திக்குமாறு முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஆளுநர் வி.கே.சக்சேனா அழைப்பு விடுத்துள்ளார்.