கர்நாடக முதல்வரிடம் விசாரணை கோரி காங். புகார்!!
கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பெலகாவி பாஜக எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிகோளி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, “இந்த தேர்தலில் பாஜக கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதற்காக ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கலாம்” என கூறினார். இது தொடர்பான ஆடியோ ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ், மஜத, ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் நேற்று பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு ஓட்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க பாஜக மேலிடம்திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ரமேஷ் ஜார்கிஹோளி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக பாஜக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் மோசடி செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, ரமேஷ் ஜார்கிஹோளி, பசவராஜ் பொம்மை, நளின்குமார் கட்டீல், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.