கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை – நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!!
முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுர் மிட்டல் கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “முதல் டோஸ் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இதனால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டன. எனவே, 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசு 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், இரு வேறு கரோனா தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது என தெரிவித்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி பிரதிபா எம்.சிங் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனுராக் அலுவாலியா கூறும்போது, “கரோனா தடுப்பூசிகளை மாற்றி செலுத்துவது தொடர்பான 4-வது சோதனை இன்னும் முடியவில்லை. எனவே, இன்றுவரை தடுப்பூசிகளை மாற்றி செலுத்துவதற்கு அனுமதி இல்லை” என்றார்.