பேரவாவியை 3 மில்லியன் டொலர் செலவில் இலவசமாக சுத்தப்படுத்தி அழகுபடுத்த ஜப்பான் நிறுவனம் இணக்கம்!!
கொழும்பில் உள்ள பேர வாவியை சுத்தம் செய்து அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை இலவசமாக முன்னெடுப்பதற்கு ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த நிறுவனம் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
ஆரம்பிக்கப்படும் நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு , இதற்காக 3 மில்லியன் டொலர் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து மானியமாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
பேர வாவி தற்போது மாசடைந்துள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பெப்ரவரி முதல் வாரத்தில் இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு , அதன் பிறகு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.