சொல்வதை கேட்பதே இல்லை – தந்தையை சுத்தியலால் அடித்த பெண் கைது!!
இந்திய வம்சாவெளியை சேர்ந்த சிங்கப்பூர் பெண் தனது தந்தையின் தலைமீது சுத்தியலால் அடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வீட்டில் மது அருந்த வேண்டாம் என பலமுறை எடுத்துக்கூறியும், தந்தை தொடர்ச்சியாக மது அருந்தி வந்துள்ளார். 2020 ஜனவரி மாதம் அரங்கேறிய இந்த சம்பவத்தில் ஷிவேதர்ஷினி கருணானெதி , 53 வயதான தனது தந்தையை 700 கிராம் எடை கொண்ட சுத்தியலால் பலமாக தாக்கினார்.
வீட்டில் இருக்கும் போது மது அருந்த வேண்டாம் என தந்தையிடம் பலமுறை கோரிக்கை மற்றும் எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார். தொடர்ச்சியாக மது அருந்துவதால் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற கவலையில் ஷிவேதர்ஷினி வேதனை அடைந்துள்ளார். ஜனவரி 6, 2020 அன்று தனது வீட்டில் பாட்டில்கள் கீழே விழும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து கண் விழித்தார் சுவேதர்ஷினி. எங்கிருந்து சத்தம் கேட்கிறது என பார்க்க தன் அறையில் இருந்து வெளியில் வந்த சுவேதர்ஷினி தனது தந்தை மது போதையில் கீழே படுத்து உறங்கி கொண்டிருப்பதை பார்த்தார். அவரின் அருகில் மது பாட்டில்களும் இருந்துள்ளன.
இந்த சம்பவம் நடைபெற்ற போது ஷிவேதர்ஷினியின் தாய் வேலைக்கு சென்று இருக்கிறார். ஷிவேதர்ஷிரியின் சகோதரி தனது அறையில் உறங்கி கொண்டிருந்தார். மது அருந்தி விட்டு உறங்கும் போது, ஷிவேதர்ஷினியின் தந்தை உறக்கத்திலேயே சிறுநீர் கழித்து விடுவார் என்றும், அதனை அவரின் மனைவி அல்லது மகள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தந்தை மது அருந்திவிட்டு உறங்குவதை பார்த்து கோபமுற்ற ஷிவேதர்ஷினி வீட்டின் சமையல் அறைக்கு சென்று சுத்தியலை எடுத்து வந்துள்ளார். தந்தை உறங்கி கொண்டிருப்பதை பார்த்த அவர், தந்தையின் தலை மீது மூன்று முதல் நான்கு முறை வேகமாக சுத்தியல் கொண்டு பலமாக அடித்துள்ளார். தாக்கப்பட்டதும் உறக்கத்தில் இருந்து கண் விழித்த ஷிவேதர்ஷினியின் தந்தை, வலியால் கதறினார். தந்தையை ரத்த வெள்ளத்தில் பார்த்த ஷிவேதர்ஷினி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
பின் அலறி கொண்டிருந்த தந்தையை மீண்டும் தாக்கினார். அதில் அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷிவேதர்ஷினியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சிங்கப்பூரில் வேண்டுமென்றே தாக்கி, காயத்தை ஏற்படுத்துவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்து 628 அபராதம் செலுத்த வேண்டும்.