ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை – ஜம்மு போலீஸ்!!
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர். இதற்கிடையே, காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடைபயணத்தை மீண்டும் தொடங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், இதுகுறித்து ஜம்மு போலீசார் கூறுகையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பயணத்தின்போது பங்கிஹாலில் பெருங்கூட்டம் இணைவது குறித்து அமைப்பாளர்கள் எந்த தகவலும் தரவில்லை என விளக்கமளித்தனர்.