;
Athirady Tamil News

குஜராத் தொங்கு பாலம் விபத்து: சீரமைப்பு பணி செய்த நிறுவன உரிமையாளர் முக்கிய குற்றவாளியாக சேர்ப்பு!!

0

குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் 1262 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெய்சுக் பட்டேல் பெயர் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தவிர மேலும் 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாலம் இடிந்து விழுந்த அக்டோபர் மாதம் 30ம் தேதியில் இருந்து ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலை காணவில்லை. அவரை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்த வாரம் அவரது மனு விசாரணைக்கு வர உள்ளது. அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி அசோக் யாதவ் கூறி உள்ளார்.

இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்கு குஜராத் அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த குழு, ஓரேவா குழுமத்தின் பல குறைபாடுகளை மேற்கோள் காட்டியது. தரமற்ற பராமரிப்பு, பாலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் டிக்கெட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்தாக குற்றம்சாட்டியது குறிப்படத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.