இரட்டை இலை சின்னம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்!!
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதிக்ககோரி நீதிபதிகளிடம் இன்றுமுறையீடு செய்யப்பட்டது.
அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் பதிவேற்றப்படும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிடுவார்.
சின்னமும் கிடைத்துவிடும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முறையிடும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.