பொதுமக்கள் அடகு வைத்த ரூ.1.70 கோடி மதிப்பிலான நகைகள் வங்கியில் இருந்து மாயம்!!
ஆந்திர மாநிலம் பள்ளநாடு மாவட்டம் சட்டெனப்பள்ளி மண்டலம் ரெண்ட பள்ளியில் வங்கி இயங்கி வருகிறது இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் செய்வதற்காக தங்களது நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றனர். இந்த நிலையில் விவசாயிகள் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக கடந்த 2022 ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அசலுடன் வட்டியை செலுத்தி நகைகளை கேட்டனர். அப்போது வங்கி அதிகாரிகள் விவசாயிகளிடம் நகைகளை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வங்கிக்குச் சென்று நகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டனர்.
வங்கி அதிகாரிகள் நீங்கள் அடகு வைத்த நகைகள் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் 2 நாட்களில் நகைகளை ஒப்படைப்பதாகவும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சமாதானம் செய்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் வங்கியில் இருந்த நகைகள் காணாமல் போன விவகாரம் வெளியில் தெரிய வந்தது. வங்கி மண்டல அலுவலக அதிகாரிகள் நேற்று முன்தினம் வங்கிக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது விவசாயிகள் அடகு வைத்த ரூ.1.70 கோடி மதிப்பிலான நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி கிளை மேலாளர் ராம்பாபு நாயக் உதவி மேலாளர் ரவிக்குமார் தங்க மதிப்பீட்டாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தங்க நகை மதிப்பீட்டாளர் சம்பத்குமார் 3 நாட்களில் நகைகளை வங்கியில் ஒப்படைக்க வேண்டும். மேலும் பழைய வங்கி மேலாளர் புதிய மேலாளர் உள்ளிட்டோர் விசாரணைக்காக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் வங்கி அதிகாரிகள் அனைவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.
சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டபோது அனைவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் வங்கி உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தேடி வருகின்றனர்.